பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில் வேல் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட வேல்ரத யாத்திரை மதுரை வந்து சேர்ந்தது. அதையொட்டி வேல் சங்கமப் பொதுக்கூட்டம், பழங்காநத்தத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி, வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், ஹெச்.ராஜாவின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். நாட்டுப்புற பாடகர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் தம்பதியரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா பேசும்போது, எதற்கு வேல் ரத யாத்திரை என்றால், பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் செய்வது போல தமிழகத்தில் மதமாற்றம் நடைபெறுகிறது.மைலாப்பூரில் ஜி.யூ.போப்பும், நெல்லையில் கால்டுவெல்லும் மத மாற்றத்தைத் தொடங்கினார்கள். அவர்களை இங்குள்ள பகுத்தறிவாதிகள் கொண்டாடினார்கள். இதற்கு முடிவு கட்டத்தான் அப்பனுக்கே பாடம் சொன்ன  தகப்பன்சாமியான முருகனின் வேலை கையில் எடுத்தோம். தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று திராவிட இயக்கத்தினர் பிரித்து வருகிறார்கள், அது பொய்.  தமிழ் மொழியை, பண்பாட்டை அழித்தவர்களே பெரியார்வழி வந்தவர்கள்தான். தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்தியவர் பெரியாரும், முன்னால் ஆட்சி செய்த நிதிக்கட்சியினரும். திராவிட கழகத்தினரும்தான். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் நிறைய உள்ளது. இதையெல்லாம் சொல்லும்போது
அவர்களுக்கு கோபம் வருகிறது என்றார்.

இப்போது சைவ மதம் என்று பிரிக்கிறார்கள். அப்படியென்றால், வைணவத்தில் தமிழர்கள் இல்லையா? சைவத்துக்கு இந்தியா முழுவதும் ஜோதிர்லிங்கம் உள்ளது. சிவனுக்கு கைலாயம் முதல் தமிழ்நாடு வரைக்கும் கோயில் உள்ளது. சைவம் என்றால் தமிழன்தான். தமிழன் என்றால் இந்துதான் என்பதை நிரூபிக்கவே இந்த வேல் யாத்திரையை தொடங்கினோம். அதோடு இந்து ஆலயங்களையும், அதன் சொத்துக்களை மீட்கவும்தான் இந்த யாத்திரை. இது ராஜா நடத்துவது அல்ல. இதன் பின்னணியில் பாஜகவின் செயல் திட்டம் உள்ளது என்று சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்... கண்டுபிடித்துவிட்டார்... அது உண்மைதான் என்று ஹெச்.ராஜா பேசினார்.