எப்போதும் பட்டாசு கொளுத்தும் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஸ்டாலினுக்கு எதிராக சரவெடியை கொளுத்திப் போட்டுள்ளார். ஸ்டாலினுக்கு சுயமாக சிந்திக்கவோ, பேசவோ தெரியவில்லை எனக் கூறி உடன்பிறப்பிகளை உசுப்பேற்றி இருக்கிறார். 

எப்போதும் காரசாரமாக பேசி எதிராளிகளை திக்குமுகாட வைக்கும் ஹெச்.ராஜாவின் டார்க்கெட்டில் இந்த முறை சிக்கியிருப்பது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். ஈரோட்டில் வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘’கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, பிரதமர் மோடி நேரில் வந்து பார்த்து சென்றார். பின்னர் அவர் மறைந்த போது நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அத்தோடு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியா காந்தி மோடியைப் போல எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை. அப்படிப்பட்ட பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் தி.மு.க தலைவரானதும் ஒரு நன்றியாவது சொல்லியிருக்கலாம். ஆனால், தலைவராகப் பதவியேற்ற அன்றே, பிரதமரை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசுகிறார்.

மு.க.ஸ்டாலினுக்கு சுயமாக சிந்திக்கவோ, பேசவோ தெரியவில்லை. சோனியா காந்தியும், ஸ்டாலினும் சேர்ந்து செய்யும் சதியில் தப்பித்தவறி மக்கள் விழுந்தால், இந்த நாடு நாசமாய்ப் போய்விடும். பிரதமர் மோடி மேற்கொண்ட பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி ஆகியவை சரியான சீர்திருத்தங்கள்தான். மக்கள் இதை உணர்ந்தே இருக்கிறார்கள். எதிர்கட்சிகள் தேவையில்லாத பொய்ப் பிரசாரங்களையும், தவறான தகவல்களையும் மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.