பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று டுவிட்டரில் பதிவிட்ட  கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தனது அனுமதி இன்றி பதிவிடப்பட்டதாகவும்  பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் அமைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை பாஜகவினர் அகற்றினர். மாநிலம் முழுவதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல், தமிழகத்தில் பெரியார் சிலைகள்  உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ராஜாவின் இந்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன், திருமாவளவன்,சீமான், திருநாவுக்கரசர் போன்ற தலைவர்கள் ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அவருக்கு எதிராக  தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

எச்.ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த பதிவை ராஜா நீக்கினார். இந்நிலையில் இன்று தனது டுவிட்டரில் பக்கத்தில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன். 

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.  ஆகவே ஆக்கபூர்வமாக,  அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இனைத்து  தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது என குறிப்பிட்டுள்ளார்..