சத்தியமங்கலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திமுகவை விமர்சித்து பேசினார். “ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள்தான் மு.க. ஸ்டாலினும் மு.க. அழகிரியும். ஆனால், மு.க. அழகிரிக்கு கட்சியில் வாய்ப்பு அளிக்காமல் உள்ளவர்கள், நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்கள்? திமுக கட்சி கிடையாது. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதன் சேர்மனாக தற்போது மு.க. ஸ்டாலின் உள்ளார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் வருவார்.

 
கோவை ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது விவசாயிகள் பம்பு கட்டணம் குறைக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை சுட்டுக் கொன்றவர்கள்தான் திமுகவினர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மின்வெட்டு வந்துவிடும். திமுகவில் உள்ள அனைவருமே ரவுடிகள்கள்தான். ஆனால், அதிமுகவில் உள்ளவர்கள் உண்மையில் விவசாயிகள். இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் விருதுபெற்ற ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது.” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.