நாடு முழுவதும் கொரோனா பீதி பற்றி எரியும் நிலையில், நாட்டின் ஒவ்வொரு மூலையில் தொற்றும் நோய் விபரம் குறித்து பிரதமர் அலுவலகம் நேரடி கண்காணிப்பில் உள்ளது. உலகில் இரண்டாவது மக்கள் தொகையை அதிக அளவில் கொண்டுள்ள இந்தியாவை கண்காணிக்க நிபுணத்துவம் வாய்ந்த ஒரு குழுவை அவர் உருவாக்கி இருக்கிறார். கொரோனா தாக்குதல் வந்த பிறகு மோடி 17 முதல் 18 மணி நேரம் வரை பணியாற்றுகிறார். இரவு 3 மணிக்கே சில நேரங்களில் உறங்கச் செல்கிறார்.  

 இதனால், எந்த விபரத்தையும், மறைக்கவும், மறுக்கவும் முடியாது. காரணம், கொரோனாவுக்கு எதிரான போருக்கு பிரதமர் அலுவலகம் தலைமை ஏற்று நடத்துகிறது என்பதே உண்மை. கொரோனா பணிகள் அனைத்தும், டெல்லியில் பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் நடக்கிறது. ஒவ்வொரு உத்தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்னல் வேகத்தில்பறக்கிறது.

கொரோனா குறித்த இந்த தகவல், மாநில - மத்திய அரசு அதிகாரிகளின் வழியாக பிரதமர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. பிரதமர் அலுவலகத்தின் பிரத்யேக, 'இ-மெயில்' முகவரியில் வந்த தகவல் அடிப்படையில் தான், அதிவிரைவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இ-மெயில் தகவலை கண்காணித்து, உடனடி நடவடிக்கைகளை எடுப்பது அதிகாரிகள் அல்ல... மத்திய அமைச்சர்கள். லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள வீடியோ காண்பரன்ஸ் முகாம் அலுவலகம் காலை ஏழு மணி முதலே செயல்பட ஆரம்பித்து விடுகிறது. 

அந்த அலுவலகத்தில் இணையமைச்சர்கள் குழு எப்போதும் சுறுசுறுப்பாய் இயங்கி வருகிறது. கொரோனா பணிகளில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பஹை கருத்தில் கொண்டு 11 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை அமைத்திருக்கிறார் மோடி. இப்படி பிரதமர் அலுவலகத்துக்கு உடனுக்குடன் தகவல் அளிக்க, பல்வேறு அடுக்குகளில் சிறப்பு தளங்கள் உள்ளன. நோய் தொற்று, சிகிச்சை, குணமடைதல், தடுப்பு என ஒவ்வொரு பணிகளும், கண்காணிக்கப்படுகின்ற. தகவல் பரிமாற்ற தாமதம் மற்றும் இடைவெளியால் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிரதமர் அலுவலகம் உறுதியாக உள்ளது. இதற்கு பிரதமருக்கு, கை கொடுப்பவர்கள், 'பி.கே.,' என்ற இருவர். ஒருவர் பி.கே.மிஸ்ரா, பிரதமரின் முதன்மை செயலர். இன்னொருவர் பி.கே.சின்ஹா. பிரதமரின் முதன்மை ஆலோசகர்.

அமைச்சரவை முடிவுகள், கொள்கை முடிவுகள் என முக்கிய பணிகளை மிஸ்ரா மேற்கொள்கிறார். அனைத்து பணிகளை மேற்பார்வை செய்வதும் இவர் தான். முடிவுகளை செயல்படுத்துவதும், ஒருங்கிணைப்பதும் சின்ஹாவின் பணி. பிரதமரின், 'கோர் நெட்வர்க்' எனப்படும் உயர்மட்ட குழுவின் இன்னொரு உறுப்பினர் ராஜிவ் கவுபா. இவர் அதிகாரிகள், அமைச்சர்கள், மாநில அரசுகள், பல்வேறு நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பை மேற்கொண்டு, பணிகளை செயல்படுத்துகிறார்.இந்த குழுவில் உள்துறை, சுகாதாரம், வெளியுறவு, ராணுவம், நிதி உள்ளிட்ட துறை செயலர்களும் இடம்பெற்றுள்ளனர்.

சீனாவில் முதலில், கொரோனா நோய் தோன்றியபோதே பிரதமர் மோடி தலைமையில், நோய் பரவல் தடுப்புக்கு அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டது. அதில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், நகர்புற வளர்ச்சி மற்றும் விமானத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கப்பல் மற்றும் ரசாயனத்துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன், முக்கிய துறைகள் வகிக்கும் மத்திய அமைச்சர்கள் பலரும், கொரோனா ஒழிப்புப் போரில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்கள் இடையேயான விவகாரங்கள், சட்ட ஒழுங்கு தேவைகள் குறித்த பணிகள் மேற்கொள்கிறார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள், இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களை பத்திரமாக பாதுகாப்பது குறித்த பணிகள் மேற்கொள்கிறார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார நடவடிக்கைகள், நிவாரண நிதி, அத்தியாவசிய தேவைக்கான பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடு, மருத்துவம் உள்ளிட்ட இதர நிதியுதவி குறித்த விவகாரங்களை கவனிக்கிறார். இடர் மேலாண்மை நிதி திட்டங்களுடன், பொருளாதார மீட்பு நடவடிக்கை உள்ளிட்ட சிக்கலான பணிகளையும் அவர் மேற்கொள்கிறார்.

ஒவ்வொரு மாநில விவகாரங்களை கவனிக்கவும் பிரதமர் மோடி, தனியாக சில அமைச்சர்களை நியமித்துள்ளார். நாடு எதிர்கொள்ளும் இந்த சிக்கலான தருணத்தில், அன்றாட நோய்பரவல் நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுடன் பேசி, அமைச்சர்கள் விபரங்களை பெறுவர்.

களப்பணியில் உள்ள சிக்கல்கள் குறித்து சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு தகவல் தெரிவிப்பர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படும். இப்படி நாடு எதிர்கொண்டுள்ள கடும் சவாலை முறியடிக்க, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.