விஜயகாந்தின் 100 கோடி சொத்துக்கள் ஏலத்துக்கு வந்தாலும், அவர் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களின் பட்டியல் வெகுநீளம்.  

நடிகர்களில் அதிகமாக சொத்துக்களை வாங்கிப் போட்டவர் விஜயகாந்த் மட்டுமே. நடிக்கத் தொடங்கி பணம் புரள ஆரம்பித்த உடன் அவர் வாங்கிய முதல் சொத்து சாலிகிராமத்தில் தற்போது அவர் குடியிருக்கும் ஆண்டாள் அழகர் இல்லம். கண்ணம்மாள் தெரு, கண்ணபிரான் காலனியில் 3013 சதுர அடி இடத்தில் அந்த வீடு அமைந்துள்ளது.

அடுத்து சாலிகிராமத்தில் உள்ள வேதவள்ளி தெருவில் 4651 சதுர அடியில் ஒரு காலி வீட்டு மனையும், 10 ஆயிரத்து 271 சதுர அடியில் வேதவள்ளி தெருவில் குடியிருப்புடன் கூடிய வணிக வளாகமும் உள்ளது. அத்தோடு சாலிகிராமம் பகுதியில் மட்டும் வீடு, இடங்கள் வணிக வளாகம் என 10க்கும் மேற்பட்ட சொத்துக்கள் உள்ளன. 

மதுராந்தகம் மாமண்டூரில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கட்டினார் விஜயகாந்த். 25 ஏக்கர் நிலத்தில் 4 லட்சத்து 38 ஆயிரத்து 956 சதுர அடியில் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியின் மதிப்பு 100 கோடி ரூபாயை தாண்டும். சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரி சாலை வானிலை ஆய்வு மையம் அருகில் மெயின் ரோட்டில் வணிக வளாகம் ஒன்றும் உள்ளது. 

தனது நண்பர் லியாகத் அலியுடன் சேர்ந்து சென்னை 100 அடி சாலையில் 20 க்கும் மேற்பட்ட இடங்களை வாங்கிப் போட்டுள்ளார் விஜயகாந்த். அதில் முக்கியமானது லீ க்ளப். கோயம்பேட்டில் திருமண மண்டபமும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையது. வானகரத்தில் கேப்டன் டி.வி அலுவலக இடம், காட்டுப்பாக்கத்தில் பண்ணையுடன் கூடிய பங்களா, ஊத்துக்கோட்டை பகுதிகளில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் முந்திரிக்காடு, நெல் பயிரிடப்பட்டு வருகிறது.

அதே போல் விஜயகாந்தின் சகலையுடன் பாண்டிச்சேரியில் மெடிக்கல் காலேஜ். சென்னை படப்பை பகுதியில் விவசாய நிலம், மதுரை. ஆம்பூர், வேலூர் ஆகிய இடங்களிலும் சொத்துக்கள் உள்ளன.