பீகார் மாநில வளர்ச்சி தடைபட்டுள்ளதாகவும், தற்போது, மாநிலத்திற்கு உறுதியான தலைவர் தேவைப்படுவதாகவும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

அரசியல் பிரச்சார வியூகரான பிரஷாந்த் கிஷோர் பல்வேறு மாநிலங்களில் வியூகம் அமைத்து பல்வேறு நபர்களை முதல்வராக்கி இருக்கிறார். பிரச்சார வியூகரான அவருக்கும் அரசியல் ஆசை எட்டிப்பார்க்க தனது மாநிலத்தில் உள்ள ஐக்கிய ஜனதாதள கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக பிரசாந்த் பேசியதால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில்தான் ‘தான் எத்தனையோ பேரை முதலமைச்சராக்கி இருக்கிறோம். நாமே முதலமைச்சராகி விட வேண்டும் என்கிற உந்துதால் அவருக்குள் ஏற்பட்டதோ என்னவோ, இதோ இப்போது வெளிப்படையான அரசியலுக்கு தலைமையேற்று தானே கட்சி தொடங்கும் விதத்தில் பீகாரில் அதற்கான விதையை தூவி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர். 

பாட்னாவில், ''பாட் பீஹார் கி'' என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். இதன் மூலம், பீஹார், இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் 10 மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.  அடுத்து பேசிய அவர், ‘’கட்சியின் கொள்கை குறித்து பல முறை எனக்கும், நிதிஷூக்கும் இடையே விவாதம் நடந்துள்ளது. அப்போது, மஹாத்மா காந்தியின்கொள்கையில் இருந்து கட்சி எப்போதும் தடம்மாறாது என நிதிஷ் கூறுவார். ஆனால், காந்தியை கொன்றவர் மீது மென்மையான போக்கை கடைபிடிக்கும் நபர்களுடன், நிதிஷ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. என்னை பொறுத்தவரை, காந்தியும் கோட்சேவும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது.

பா.ஜ.க - நிதிஷ் கொள்கை ஒத்து போகாது. கொள்கையை அக்கட்சியுடன், அவர் சமரசம் செய்துள்ளார். நிதிஷுக்கு பா.ஜ., கூட்டணி தேவையில்லை. கூட்டணி அமைத்த பின்னர் அவர் மாறிவிட்டார். இக்கூட்டணியால் மாநிலம் வளர்ச்சி பெறவில்லை. பீஹார் வளர்ந்து வரும் சூழ்நிலையில், அதனை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட வேண்டும். அப்படி செய்தால், பீஹார் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இதற்கு காரணம் என்ன? 2005 ல் மாநிலம் எப்படி இருந்ததோ, இன்றும் அப்படித்தான் உள்ளது. இந்தியாவில் ஜார்க்கண்டிற்கு அடுத்து, பீஹார் இன்னும் பின்தங்கிய மாநிலமாக தான் உள்ளது. 2005 ல் பீஹார் பின்தங்கிய மாநிலமாக உள்ளதாக தெரிவித்தேன். 

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது பீஹார் இன்னும் அப்படியே உள்ளது. தற்போது பீஹாருக்கு நல்ல தலைமை தேவைப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது’’ என அவர் கூறினார். பீஹாருக்கு நல்ல தலைமை தேவைப்படுகிறது என அவர் கூறியிருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி இருக்கிறது. அந்த நல்ல தலைமையாக தன்னைத்தான் அவர் முன்னிறுத்திக் கொள்கிறார். விரைவில் அவர் தனியாக கட்சி ஆரம்பித்து தானே முதல்வராகி விட வேண்டும் என்கிற திட்டத்தில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.