உடல் நலக் குறைவால் வீட்டில் ஓய்வாக இருக்கும் தேதிமுக தலைவர் விஜயகாந்த், அவ்வப்போது கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்று வருகிறார். 

மக்களவை தேர்தலில் தேமுதிக போட்டியிடும் நான்கு தொகுதிகளின் வெற்றியை, ஆவலோட எதிர்பார்த்து கொண்டு இருக்கும் அவர், சமீபத்தில், கட்சி அலுவலகத்தில் சேலம், விழுப்புரம், விருதுநகர், சென்னை, திருச்சி மாவட்டச் செயலர்களை தனித்தனியாக கூப்பிட்டு, வெற்றி வாய்ப்பு பற்றி கேட்டிருக்கிறார். அப்போது சேலம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், 'கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷ் ஜெயிச்சுடுவார். ஆனால், குறைந்த அளவு ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றி பெறுவார் எனக் கூறியிருக்கிறார்.

உடனே விஜயகாந்த் கண்ணாடியை கழற்றி கீழே வைத்து விட்டு, 'நீ மாவட்டத்துல, ஒழுங்கா கட்சியை வளர்த்திருந்தா, இந்த நிலைமை வந்துருக்குமா..?' என தடாலடியாக கேட்டாராம். இந்தக் கேள்வியை எதிர்பாராத இளங்கோவன் அப்படியே ஷாக்காகி அமைதியாகி விட்டாராம். கள்ளக்குறிச்சியில சரி, மற்ற தொகுதிகளில் நிலவரம் குறித்து கேட்டிருக்கிறார்.

உண்மை நிலவரம் நெகட்டிவாக இருந்தாலும், ’நிச்சயமா வெற்றி நமக்குத் தான்’ என மற்ற மாவட்ட செயலாளர்கள் கூற... அதை அப்படியே நம்பி விட்டத்தை பார்த்து சிரித்து மகிழ்ந்திருக்கிறார் விஜயகாந்த். முன்பெல்லாம் கட்சி நிர்வாகிகள் என்ன சொன்னாலும் களநிலவரத்தை சில சோர்ஸ்கள் மூலம் தெரிந்து கொண்டு அவர்கள் சொல்லும் பதிலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது விஜயகாந்தின் வழக்கம். ஆனால் இப்போது மற்றவர்கள் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்ளும் நிலையில் இருக்கிறார் அவர்.

 

வெளியே வந்த மாவட்ட செயலாளர்கள், உண்மையை சொல்லி இருந்தால் சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவனுக்கு விழுந்த டோஸ் தான் நமக்கும் கிடைத்து இருக்கும் என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே தலைவருக்கு அல்வா கொடுத்து சமாளித்த திருப்தியில் கிளம்பி இருக்கிறார்கள்.