உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எப்படி

மத்திய அரசு அவசரச் சட்டமாக இயற்ற முடியும் ? ராமதாஸ் கேள்வி 

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் எப்படி மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த அதிமுக, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து நேரம் கேட்கின்றனர்; இவ்வளவுக்கு பிறகும் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க பிரதமர் மறுத்து தமிழகத்தின் மீது ஒவ்வாமை கொண்டிருப்பதாகத் தான் தோன்றுகிறது. பிரதமரின் இந்த நிலைப்பாடு ஏற்க முடியாது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க இயலாது என்று கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாகும்.

ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அந்த வழக்கு சார்ந்த பொருள் தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை. உதாரணமாக, கடந்த 2014 ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி அரசு, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பித்தது. அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலையில் மீண்டும், மீண்டும் நான்கு முறை அவசர சட்டங்களை பிறப்பித்து வந்தது.

மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகும் அவசர சட்டத்தை அரசு பிறப்பித்தது. ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என்பது மத்திய அரசுக்குத் தெரியாதா? என்பதை பிரதமர் விளக்கவேண்டும்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு உச்சநீதிமன்றத்திற்கு உரிய மதிப்பளித்து வந்திருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. ஜல்லிக்கட்டு குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி தலைமையிலான அமர்வு தான் காவிரி பிரச்சினை குறித்த வழக்கையும் விசாரித்து வருகிறது. காவிரி வழக்கில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்ட போது, முதலில் அதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று மிரட்டலாகக் கூறி ஆணையை திரும்பப் பெற வைத்தது. 

அதேபோல், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தாக்கூருடன் வெளிப்படையான மோதல் போக்கை கடைபிடித்ததுடன், அவர் தலைமையிலான நீதிபதிகள் குழுவின் பரிந்துரைகளையும் கிடப்பில் போட்டது. இப்படிப்பட்ட அரசு உச்சநீதிமன்றத்தை மீறி எதையும் செய்யக்கூடாது என கூறுவது விந்தையிலும் விந்தையாக உள்ளது.

பிரதமரை சந்தித்து பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் என்றும், அதற்கான தமிழக அரசின் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள் என கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? என்ன செய்ய முடியும்? என்பது தெரியவில்லை. ஜல்லிக்கட்டை உறுதி செய்யும் வகையில் அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது வரவேற்கத்தக்கதே. ஒருவேளை எதுவும் சாத்தியமில்லை என்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.