2021-2023 ஆண்டிற்கான நிறுத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியை உடனடியாக மத்திய அரசு தர வேண்டும் என தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை  சின்னமலை பகுதியில் அமைந்துள்ள சென்னை அரசு மேல்நிலைப் பள்ளியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் செலவில் புதிய உள்விளையாட்டு அரங்கத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, 

இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மற்றும் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்;கொரானா  பரவல் காரணமாக நாடாளுமன்ற தொகுதி நிதி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தபட்டுள்ளது. இது மக்களை தான் பாதிக்கும், மக்கள் எங்களை நம்பி ஓட்டு போட்டவர்கள், நாங்கள் எந்த முகத்தை வைத்து அவர்களை சந்திப்போம். 

உடனடியாக அந்த நிதியை மீண்டும் தர அனுமதிக்க வேண்டும். என் தொகுதியை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை பேரிடர் காலங்களில் அதிகமாக சைதாப்பேட்டை கூவம், வேளச்சேரி ஏரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பை தரும், எனவே உடனடியாக தமிழக அரசு அதை நினைவில் கொண்டு ஏரிகளை தூர்வார வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 50 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள பள்ளி மாணவர்களுக்கான இந்த விளையாட்டு அரங்கத்தை அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக வர உள்ள தலைவர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அவர் கூறினார்.