தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்  மானியக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பொதுப்பணி, கூட்டுறவு, செய்தித் தொடர்பு, தமிழ் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 

அப்போது பேசிய முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தற்போது ரூ. 2.50 கோடியாக இருக்கிறது. இதனை ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை பரிசீலித்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நிதித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீது பதிலுரை வழங்கிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.5000லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.2000 லிருந்து ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும், தமிழக வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடு கட்டித் தரப்படும் என்றும், இதற்கான பணத்தை அவர்கள் தவணை முறையில் செலுத்திக்கொள்ளலாம் என்றும் அதிரடியாக அறிவித்தார். இதனை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கைதட்டி வரவேற்றனர்.