ஓசூர், நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தாக்கல் செய்தார். 

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் இன்று 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் தினந்தோறும் ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் நாகர்கோவில் மற்றும் ஒசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நாகர்கோவில், ஓசூர் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனையடுத்து நாகர்கோவில், ஓசூர் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த சட்டமானது நாளை வாக்கெடுப்பு எடுத்து நிறைவேற்றப்படும். அதற்கு பின்பு அதிகாரப்பூர்வமாக ஓசூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய இரண்டும் மாநகராட்சிகளாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

 

ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, வேலூர் என மொத்தம் 12 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்நிலையில், மேலும் 2 மாநகராட்சிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால், தமிழகத்தில் உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.