சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு அடக்குமுறையைக் கையாண்டு மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், சீனாவை சேர்த்து அமெரிக்கா அறிவித்துள்ளது.

உலக அளவில் மதச் சுதந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து அறிய கடந்த 1998ஆம் ஆண்டு அமெரிக்க அரசு சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்கா ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கியது. ஒவ்வொரு ஆண்டும் உலகில் எந்தெந்த நாடுகளில் மத சுதந்திரங்கள் மீறப்படுகின்றன என்பதை இந்த ஆணையம் கண்காணித்து அதை பட்டியலிடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் மதச் சுதந்திரத்திற்கு எதிரான நாடுகள் குறித்த பரிந்துரையைவெளியிட்டது. 

 

அதில் பாகிஸ்தான் மற்றும் சீனா உட்பட 8 நாடுகள், திட்டமிட்டு மதச்சுதந்திர மீறல்களில் ஈடுபடும் நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.  சவுதி அரேபியா, மியான்மர், எரித்ரியா, நைஜீரியா, துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை மிக மோசமான மத உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் ரஷ்யா, கியூபா, நிகரகுவா மற்றும் கொமொரோஸ் ஆகிய நாடுகள் கண்காணி க்கப்பட வேண்டிய நாடுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்நாடுகள் மத சகிப்புத்தன்மை அற்ற நாடுகளாக கருதப்படு கிறது. குறிப்பாக பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மிகவும் மோசமான நிலையில் வாழ்கின்றனர் எனவும் சீனா அதன் பங்காளியாக இருந்து வருவதாகவும், அமெரிக்க மதச் சுதந்திர துறையின் மூத்த அதிகாரியாக உள்ள சாமுவேல் பிரவுன் பேக் குற்றம்சாட்டியுள்ளார். 

பாகிஸ்தானில் குறிப்பாக இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவ சிறுமிகளை சீனாவுக்கு பணிப்பெண்களாக (அடிமை பெண்களாக) விற்பனை செய்யும் கொடுமைகள் இருந்து வருகிறது, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இன சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சீனா ஆண்களுக்கு திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர், அவர்கள் ஒவ்வொருவரும் சீனாவின் அடிமை பெண்களாக அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படு கிறார்கள், இந்தப் பெண்களுக்கு ஆதரவு இல்லாததாலும், சிறுபான்மையினர் என்பதாலும், பாகிஸ்தான் அரசு பாகுபாடு காட்டுவதாலுமே இந்த கொடுமை நிகழ்வதாக பிரவுன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது, குறிப்பாக சீனாவில் பெண்கள் பற்றாக்குறை அதிக அளவில் இருப்பதால் அவர்கள் பல நாடுகளை சேர்ந்த பெண்களை மணக்கின்றனர், பின்னர் அவர்கள் பணி பெண்களாகவும் பயன்படுத்தப்படுகிறார்கள் என சாமுவேல் பிரவுன் பேக் தெரிவித்துள்ளார். 

அதேபோல் இந்தியாவில் நடைபெற்ற சிஏஏ போராட்டத்தை காரணம் காட்டி மதச் சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் நாடுகளின் பட்டியலில் இணைக்க இந்தியாவின் பெயர் பரிந்துரையில் இருந்ததாகவும் ஆனால் அதை அமெரிக்க வெளியுறவுத்துறை நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது ஆனாலும் இந்தியாவை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரவுன் தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்தீர்கள், ஏன் இந்தியாவை சேர்க்கவில்லை என ஒரு பாகிஸ்தான் நிருபர் பிரவுனிடம் கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த பிரவுன், பாகிஸ்தானில் அரசாங்கம் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறது. இது இந்தியாவில் நடக்காது. உலகில் அவதூறு வழக்குகளில் பாதி பாகிஸ்தானில் உள்ளதாக அவர் பதில் அளித்தார்.