திமுக அமைச்சரின் மதவெறி செயலை கண்டிக்கிறோம்.. ஒன்று திரளும் இந்து அமைப்புகள் - சமாளிக்குமா திமுக ?
Kanyakumari : ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவரான மனோ தங்கராஜ் எந்த அடிப்படையிலும் தேரின் வடத்தை பிடிக்கக்கூடாது என்று இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற முருகன் ஆலயமான குமாரகோவில் வேளிமலை முருகன் ஆலய தேரோட்டம் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. மிகவும் பாரம்பரியமான இந்த ஆலயத்தின் தேரின் வடத்தை இந்து மத சம்பிரதாயங்களை கடைபிடிப்பவர்கள் தவிர மற்றவர்கள் பிடிக்கக்கூடாது என்று இந்துக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவரான மனோ தங்கராஜ் எந்த அடிப்படையிலும் தேரின் வடத்தை பிடிக்கக்கூடாது என்று இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தேரோட்ட நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் எதிர்ப்பு தெரிவித்த இந்துக்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்துக்களை சார்ந்தவர்கள் தேரை வடம்பிடித்து இழுப்பார்கள் என்று கூறி தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைப்பதற்கு வந்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் பல பாஜக மற்றும் ஹிந்து இயக்க பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் முருகன் ஆலயத்தில் நடந்த தேரோட்டம் ஆகம விதிமுறைகளை மீறி அமைச்சரின் சர்வாதிகார போக்கில் நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றிய ஹிந்து கோவில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘இந்த மத நம்பிக்கைகளுக்கு விரோதமாக அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்ற மமதையில் இந்துமதத்தில் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற மரபுகளை மீறும் வகையில் தொடர்ந்து ஆலயங்களில் மத நம்பிக்கை இல்லாதவர்கள் நுழையக் கூடாது என்கின்ற அறநிலையத்துறையின் சட்டத்தை மீறி பலவந்தமாக இந்துக்களின் மனதை புண்படுத்தி குமாரகோவில் தேரை இழுத்த தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ்ன் மதவெறி செயலை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?
இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!