இது புதிய வகை இந்தி திணிப்பு.. தமிழக மக்களின் உணர்வோடு விளையாடாதீங்க.. ரயில்வே துறையை எச்சரிக்கும் ராமதாஸ்.!
திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது.
புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித்துறை விளையாடக் கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது.
இதையும் படிங்க;- பேராபத்து.. தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது.. அலறும் அன்புமணி.!
மத்திய அரசு அலுவலகங்களாக இருந்தாலும் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் தொடர்வண்டி நிலையம் போன்ற இடங்களில் உள்ளூர் மொழியான தமிழில் தான் அறிவிப்பு பலகைகள் முதன்மையாக வைக்கப்பட வேண்டும். கூடுதலாக ஆங்கிலம், இந்தியில் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது புரியாது. இது புதிய வகை இந்தித் திணிப்பாகும்.
புதிய, புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித்துறை விளையாடக் கூடாது. இந்தியைத் திணிக்கும் இத்தகைய அறிவிப்பு பலகைகள் திருப்பூர் உட்பட எங்கு இருந்தாலும் அவற்றை தொடர்வண்டித் துறை உடனடியாக அகற்ற வேண்டும் என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- ராஜஸ்தான், பஞ்சாபில் வந்தாச்சு.. பழைய ஓய்வூதியம் தமிழகத்தில் எப்போது? அரசு ஊழியர்களுக்காக குரல் கொடுக்கும் PMK