தமிழக இயற்கை மருத்துவர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஆயுஸ்  நிறுவன செயலாளர்  மீது நடவடிக்கை தேவை என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாது என்பதை பிரதமர் உறுதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசின் ஆயுஸ் அமைச்சகத்தின் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கு மூன்று நாள் இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் இந்தியா முழுவதும் 400 க்கும் மேற்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆயுஸ் அமைச்சகத்தின் அதிகாரிகள் அனைவரும் இந்தியிலேயே உரையாற்றியதால், எங்களுக்கு இந்தி புரியவில்லை ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள் என்று கூறிய தமிழக மருத்துவர்களை, இங்கு தெரியவில்லை என்றால் கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறி அவமதித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ஆன்லைன்  பயிற்சியில், இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என ஆயுஸ் செயலாளர் திரு.ராஜேஷ் கோட்சே மொழி வெறியுடன் மிரட்டல் விடுத்திருக்கிறார்.  இப்படி மத்திய அரசின் செயலாளரே அநாகரீகமாகவும், பண்பாடாடற்ற முறையிலும் மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டு இருப்பது வெட்கக்கேடானது. மேலும் ஆங்கித்தில் பயிற்சி கொடுங்கள் என்று கூறிய தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மீது எரிந்து விழுந்து, அவர்களின் பெயர்களைக் கேட்டு அச்சுறுத்தி இருக்கிறார். கண்ணியம் இன்றி எல்லை மீறி இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் ஹிந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று திருமதி கனிமொழியிடம் பேசிய அதிகாரி மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், ராஜேஷ் கோட்சே இப்படி மொழி வெறி பிடித்து பேசியிருக்க மாட்டார். 

அதிகாரிகளை பேச அனுமதித்து மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பது தான் எங்களின் திட்டம் என்ற பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தமிழக மருத்துவர்களிடம், அநாகரீகமாக நடந்து கொண்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுத்து, இனி இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நேர்ந்து விடாமல் உறுதி செய்திட வேண்டும். தமிழகத்திலிருந்து பங்கேற்பதை அவமதிக்கும், தரக்குறைவான போக்கு கைவிடப்பட வேண்டும் என்றும், அதேபோன்ற பயிற்சிகள் கூட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் நடைபெறவேண்டும் என்றும், பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஸ்டாலின் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.