high court seeks government explanation in leaders memorial case
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களை அங்கிருந்து இடம் மாற்றக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் சென்னை மெரினாவில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.
அந்த சமாதிகளை மெரினாவிலிருந்து இடம் மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதன் மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி, கடற்பரப்பிலிருந்து 500 மீட்டர் இடைவெளிக்குள் எந்தவித கட்டுமானங்களும் இருக்கக்கூடாது என்பது விதி. எனவே மெரினாவில் நினைவிடங்கள் அமைக்கப்பட்டிருப்பது சட்டத்தை மீறிய செயல். தேசப் பிதாவான காந்திக்கு கிண்டியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களை மாற்ற வேண்டும் என டிராபிக் ராமசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். விளக்கமளிக்க 2 வாரம் கால அவகாசம் வேண்டும் என அரசு வழக்கறிஞர் கோரியதை அடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
