சர்க்கார் படத்தில் நடித்து வரும் தளபதி விஜய்க்கு நீதிமன்றம் மூலம் புது சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இளைய தளபதியாக இருந்து மெர்சல் படத்திற்கு பிறகு தளபதியாக மாறிப்போன விஜய், அதிரடி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார். மெகா வெற்றி பெற்ற துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால், தீபாவளிக்கு படத்தை பார்த்துவிட, இப்போதிலிருந்தே ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ், இந்த இருவருடன் சன் பிக்சர்ஸ் என்ற பிரமாண்டமும் இணைந்துள்ளதால், எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது. இந்த நிலையில், சர்க்கார் படத்தின் ஃபர்ட்ஸ்லுக் போஸ்டர் கடந்த ஜூன் 21ஆம் தேதி வெளியானது. போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பதுபோல இருந்ததால், கடும் விமர்சனங்கள் எழுந்தன. பாமக உள்ளிட்ட கட்சிகளும் அந்த காட்சியை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற சர்க்கார் படத்தின் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது.

இந்த நிலையில், புகைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட நடிகர் விஜய், தயாரிப்பாளர் சன்பிக்சர்ஸ் மற்றும்இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் இருந்து அபராதம் வசூலிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில், சர்கார் படத்தின் விளம்பரம் புகைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பொது இடங்களில் புகை பிடிக்க தடை சட்டங்கள் உள்ளதால், புகைபிடித்தலின் அபாயம் குறித்த எச்சரிக்கை விளம்பரங்கள்வெளியிடப்பட்டு வருவதாகவும் மனுவில் கூறப்பட்டது. இத்தகைய சூழலில், விஜய் போன்ற பெரிய நடிகரின் படத்தின் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை வைத்தால், புகைபிடிப்பதை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும், எனவே, விஜய், முருகதாஸ், சன்பிக்சர்ஸ் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ.10 கோடி அபராதம் வசூலிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

வசூலிக்கப்படும் ரூ.10 கோடியை சென்னை ராயப்பேட்டை அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிட வேண்டுமஎன்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ் மற்றும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுவிசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் முழுவதும் தயாராகி, திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்னர் தான் சர்ச்சையில் சிக்கி, வெளியீட்டில் பிரச்சனை ஏற்படும். ஆனால், சர்க்கார் படம் ஃபர்ட்ஸ்லுக் போஸ்டரிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளதால், படம் திட்டமிட்டபடி, தீபாவளிக்கு வெளிவருமா என்று ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.