அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 முறைக்கு மேல் போட்டியிட முடியாது என்பது போல இந்தியாவிலும் ஏன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு உடல் தகுதி சான்றிதழையும் கட்டாயமாக்கக் கோரி பொள்ளாச்சியை சேர்ந்த சுப்பையா என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அமெரிக்காவில் இரு முறைக்கு மேல் அதிபர் பதவி வகிக்க முடியாது. அமெரிக்காவைப் போன்று இந்தியாவில் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை? ஒருவரே மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில், எண்ணிக்கை அடிப்படையிலான கட்டுப்பாடு ஏன் விதிக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லாததே, ஒரே நபர் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட காரணம் என தெரிவித்த நீதிபதி, ஒருவர் மக்கள் பணியாற்ற வந்துவிட்டால், அவரை பற்றிய முழு விவரங்களும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இந்த வழக்கில், சட்ட ஆணையம், மாநில சட்ட ஆணையம் ஆகியவை எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.  வழக்கில் பதில் அளிக்கக் கோரி சட்ட ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.