சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2500ஐ நெருங்கிவிட்டது.

கொரோனாவிற்கு மருந்து இல்லாததால், தனிமைப்படுதலும் சமூக விலகலை கடைபிடிப்பதன் மூலம் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முடியும் என்பதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துவிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளிப்பதுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றன. 

இந்தியாவில் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து தப்பிக்க, தனிமைப்படுதல் மட்டுமே ஒரே வழி. அதேபோல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், கொரோனா வைரஸை எதிர்த்து மனித உடலின் நோய் எதிர்ப்பு சிஸ்டமே சிறப்பாக செயல்பட்டு, அதிலிருந்து காப்பாற்றிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கொரோனா எளிதாக தாக்கும் என்பதால் தான், முதியவர்கள் அதிகமாக கொரோனா தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அதேபோல குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் குழந்தைகளும் பாதிக்கப்படக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படும் இளம் மற்றும் நடுத்தர வயதினரை கொரோனா தாக்கினாலும், அதிலிருந்து அவர்கள் மீண்டு உடல்நலம் பெற்றுவிடலாம். 

எனவே நோய் எதிர்ப்பு சக்தி தான் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக உள்ளது. அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட சித்த மருந்தான, கப சுர குடிநீரை வாங்க மக்கள் அலைமோதுகின்றனர். சித்த, நாட்டு மருந்து கடைகளில் கப சுர குடிநீரை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மக்கள் அதை வாங்க ஆர்வம் காட்டுவதால் அதன் விலையை அதிகரித்து சிலர் விற்கின்றனர். அதற்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. 

இந்நிலையில், கப சுர குடிநீரை அனைவருக்கும் இலவசமாக வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசஃப் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  கொரோனா மருந்தை ஆய்வு செய்ய சித்த மருத்துவர்கள் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது. கப சுர குடிநீரை அனைவருக்கும் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது. மனுதாரர் தாக்கல் செய்த மனு குறித்த அரசே முடிவெடுக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.