இந்தியாவில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கை போல இல்லாமல் இம்முறை சில தளர்வுகளுக்கு அனுமதியளித்த மத்திய உள்துறை அமைச்சகம், ஒயின் ஷாப்புகளையும் திறக்க அனுமதியளித்தது. 

அதன்படி, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே ஒயின் ஷாப்புகள் திறக்கப்பட்டுவிட்டநிலையில், தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 

டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் வயது வாரியாக நேரம் மதுபானம் வாங்க நேரம் ஒதுக்கப்பட்டது. காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை 50 வயதிற்கு மேற்பட்டவர்களும், 40-50 வயதுக்குட்பட்டவர்கள் மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரையும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 40 வயதிற்கு உட்பட்டவர்களும் வாங்க வேண்டும் என அரசு நேரம் ஒதுக்கியது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, காலை 7-8 மணி முதலே மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடை வாசல்களில் கூடினர். சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 1700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை இன்று செய்யப்பட்டது. 

அனைத்து கடைகளிலுமே மது பிரியர்கள் காலை முதலே ஆதார் அட்டையுடன் நீண்ட வரிசையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று மது வாங்கி சென்றனர். ஊரடங்கால் வருவாயே இல்லாமல் அரசு கஜானாவின் காலியாகி கொண்டிருந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டதையடுத்து அரசின் கவலையை குடிமகன்கள் தீர்த்துவிட்டனர். 

தங்கள் மீது அரசு வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் மதுபானங்களை வாங்கி, அரசுக்கு வருவாய் ஈட்டிக்கொடுத்துள்ளனர். இன்று ஒருநாளில் மட்டும் ரூ.170 கோடிக்கு மது விற்பனை ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 40 நாட்களுக்கும் மேலாக காய்ந்து கிடந்தவர்கள், மதுபானத்தை மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்று, அரசையும் மகிழ்வித்துள்ளனர்.