பரபரப்பான திமுக செயற்குழு கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் அறிவாலயம் அமைந்துள்ள சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

திமுகவிலிருந்து கருணாநிதியால் நீக்கப்பட்ட அழகிரி, கருணாநிதியின் மறைவிற்கு பிறகு போர்க்கொடி தூக்கியுள்ளார். மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பை கேட்கும் அழகிரி, தனது மகனையும் கட்சியில் முன்னிலைப்படுத்த தீவிரம் காட்டிவருகிறார். 

ஆனால் அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பது நல்லதல்ல என ஸ்டாலினிடம் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார். அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ள இந்த பரபரப்பான அரசியல் சூழலில் திமுக செயற்குழு இன்று ஸ்டாலின் தலைமையில் கூடி நடந்துவருகிறது. 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் செயற்குழு கூடியுள்ளது. அதற்காக செயற்குழு உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் ஏராளமான திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் குவிந்துள்ளனர். 

அதனால் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கியமான பகுதி அண்ணா சாலை. காலையில் ஆயிரக்கணக்கானோர் அந்த சாலை வழியாக பணி நிமித்தமாக செல்வார்கள். இந்நிலையில், தேனாம்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.