தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் 4 நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி உள்பட 15 மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது. இடியுடன் கூடிய மழையும் பெய்கிறது. இதனிடையே,  தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி "தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க" மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.  

மேலும், அணைகளின் நிலவரங்கள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை கண்காணித்து தகவலை உடனுக்குடன் தரவும் முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.