தமிழகத்தில் கனமழை பாதிக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மீட்புப்பணிகளை எடப்பாடி அரசு துரிதப்படுத்த வேண்டும். மேலும் கழக  உடன்பிறப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை முன்னின்று செய்து தரவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எடப்பாடி பழனிசாமி அரசு முழுவேகத்தில் முடுக்கிவிட வேண்டும். கடந்த சில நாட்களாக இம்மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த நூறு ஆண்டுகளில் தென்னிந்தியாவில் எங்கேயும் இல்லாத அளவிற்கு 91 செ.மீ அளவிற்கு ஒரே நாளில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 

கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் மழையின் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ளது. மழையால் உயிரிழந்துள்ள 5 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இயற்கையின் இந்தச்சீற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளைப் பழனிசாமி அரசு முழுவேகத்தில் மேற்கொள்ள வேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகள் அடங் கிய சிறப்புக்குழுக்களை உடனடியாக அமைத்து மாவட்ட வாரியாக இந்தப் பணிகளைச் செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதில் கழக உடன்பிறப்புகளும் தங்களை முழு அளவில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.