தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தொடர்ந்து போராடி வருகிறோம் என்றும் இன்னும் இரண்டொரு நாட்களில் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சேலத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெங்குநோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரைக் கண்காணிக்க பல்வேறு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் காய்ச்சல் காரணமாக இறப்பு என்ற நிலை இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சரியான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். காய்ச்சல் என்றால், பொதுமக்கள் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் கூறினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் எந்த குழப்பமும் இல்லை என்றும், விலக்கு பெறுவதில் தொடர்ந்து போராடி வருகிறோம் என்றும் கூறினார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றும். அதற்கான சட்ட வழிமுறைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னும் இரண்டொரு நாட்களில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது குறித்த முடிவு வெளியாகும் என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கையுடன் உள்ளதாகவும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.