தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத தொடக்கம் முதல் தினமும் தாறுமாறாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த  2 நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. நேற்று வெறும் 31 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெறும் 38 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1242ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பரிசோதனை தமிழ்நாட்டில் முன்பைவிட அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருப்பது, தமிழ்நாட்டில் கொரோனா வீரியம் கட்டுக்குள் வந்திருப்பதை உணர்த்துகிறது.

கொரோனா தொற்று தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்டது முதல், களத்தில் இறங்கி தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டதுடன், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்துவது, தினமும் செய்தியாளர்களை சந்தித்து பாதிப்பு குறித்த அப்டேட் மற்றும் தடுப்பு பணிகள் குறித்து விளக்கமளித்துவந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த சுமார் 15 நாட்களுக்கும் மேலாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அவருக்கு பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தான் செய்தியாளர்களை சந்தித்துவந்தார். 

இதையடுத்து விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்காததற்கு பல அரசியல் சாயங்கள் பூசப்பட்டு பல்வேறு கருத்துகள் உலாவந்தன. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அதுகுறித்து விளக்கமளித்தார். 

செய்தியாளர்களை சந்திக்காதது குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நான் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துவது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், முதல்வரின் உத்தரவுக்கிணங்க சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், செய்தியாளர்களை சந்தித்தாரே தவிர, வேறு எந்த காரணமும் கிடையாது என்றார்.

அதேபோல பீலா ராஜேஷ் தினமும் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்த நிலையில், இடையில் 2 நாட்கள் தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திக்காமல் அவர் சந்திப்பது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தலைமை செயலாளர், பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை சார்ந்த அப்டேட் மட்டுமே கொடுப்பார். அதேநேரத்தில், தலைமை செயலாளராகிய தான், அனைத்து துறை சார்ந்த நடவடிக்கைகளையும் கண்காணித்து வருவதால் பல்துறை சார்ந்த விளக்கங்களை அளிக்க முடியும் என்பதால், தான் சந்தித்தாக தெரிவித்திருந்தார். அந்த 2 நாட்களை தவிர மறுபடியும் பீலா ராஜேஷே செய்தியாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.