Health Minister vijayabasakar has to resign from the Gudka scam
குட்கா ஊழலில் தொடர்புடைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஊழலில் தொடர்புடை டிஜிபி ராஜேந்திரன் பதவி விலகிட வேண்டும் எனவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றதை அடுத்து, குட்கா கிடங்கு ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் ஒரு டைரி சிக்கியதாகவும் அதில், குட்காவை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கும் சென்னையில் செயல்பட்டு வந்த குட்கா நிறுவனம் லஞ்சம் கொடுத்தது தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் டிஜிபி ராஜேந்திரனின் பதவி நீட்டிக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தி வந்தார்.
இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் திமுக வழக்கு தொடர்ந்தது. அந்த உத்தரவில் இதுகுறித்து விசாரிக்க விசாரணை அதிகாரியாக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். அவர் நேர்மையாக வழக்கை விசாரித்து வந்த நிலையில், அவர் மாற்றப்பட்டுள்ளார். இதை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இதுகுறித்து பலமுறை செயல்தலைவர் குரல் கொடுத்தும் பேச அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
வழக்கம்போல் இம்முறையும் சட்டப்பேரவையில் குரல் எழுப்ப முயன்றுள்ளா ஸ்டாலின் ஆனால் வழக்கம்போல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடுப்பான ஸ்டாலின் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் இல்லை என்றால் அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
