Head of textbook corporation PB Valarmathi to joins OPS camp

சசிகலாவின் தீவிர ஆதரவாளரான வளர்மதி, பன்னீர்செல்வம் அணிக்கு தாவுகிறார் என்று பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அனால் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அதை வளர்மதி மறுத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், சசிகலாவின் தீவிர விசுவாசியாக இருந்து வந்தார் வளர்மதி. அதனால், ஓ.பி.எஸ் அணி பற்றி அவர் ஊடகங்களில் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

வளர்மதியின் விசுவாசத்திற்கு பரிசளிக்கும் வகையில், சசிகலா அவருக்கு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பதவியை வழங்கினார். அதன் பின்னர் அவர் தினகரனுக்கும் விசுவாசியாக இருந்து வந்தார். 

இந்நிலையில் ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்தின், மாநில பேச்சாளர்களின் பயணம் மற்றும் பண விவகாரத்தில் குறுக்கிட்டு பல இடையூறுகள் செய்ததாக வளர்மதி மீது, தினகரனிடம் பல பேச்சாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்திற்கு, முக்கிய பேச்சாளர்கள் வராததற்கு காரணம் வளர்மதியே என்றும் அவரிடம் கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து, வளர்மதியை அழைத்து விசாரித்த தினகரன், அவரை கொஞ்சம் கடுமையாக திட்டியதாகக் கூறப்படுகிறது. 

கட்சியின் மூத்த உறுப்பினரான தன்னிடமே விசாரணை என்ற பெயரில் கடுமையாக தினகரன் திட்டியதால், வெறுத்துப்போன வளர்மதி, ஓ.பி.எஸ் அணிக்கு சொல்லப்போகிறார் என்று தகவல்கள் வெளியாயின.

ஆனால் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த வளர்மதி, இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது, அடிப்படை ஆதாரம் அற்ற தகவல் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், தமிழ்நாடு பாடநூல் வாரிய கழக தலைவர் பதவி மட்டும் இல்லை என்றால், வளர்மதி இந்நேரம் ஓ.பி.எஸ் அணிக்கு போயிருப்பார். அந்தப் பதவி காரணமாகவே, இன்னும் தினகரன் அணியில் அவர் நீடிக்கிறார் என்று, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.