கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுகுட்டியிடம் பலமுறை தான் தொடர்பு கொண்டு பேசியதாகவும்,  அவர் எங்கள் அணிக்கு வந்தால் சந்தோசம் எனவும் இபிஎஸ் அணியின் ஒ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். 

சசிகலாவிடமிருந்து ஒபிஎஸ் பிரிந்தவுடன் முதலில் அவருக்கு ஆதரவு தெரிவித்தவர் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுகுட்டி. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நடனமாடி வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டவர். 
ஆனால் சில நாட்களாக ஒபிஎஸ் அணியினருக்கும் எம்.எல்.ஏ. ஆறுகுட்டிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. 

தன்னை பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்து வந்ததால் ஆறுகுட்டி அதிருப்தியில் இருந்துள்ளார். 

இந்த நிலையில் இன்று கோவை கொடிசியா மைதானத்தில் புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் எம்.எல்.ஏ ஆறுகுட்டி புறக்கணித்தார். 

மேலும் செய்தியாளர்களை சந்தித்த ஆறுகுட்டி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிவிட்டேன் எனவும், நான் தொகுதி மக்களை மட்டுமே நம்பியுள்ளேன் எனவும், தெரிவித்தார். 

எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், அதிமுக இரு அணிகள் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் எனவும் தெரிவித்தார். 

எனது தொகுதி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கும், நிதி ஒதுக்கீடு செய்ததற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார். 

இந்நிலையில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுகுட்டியிடம் பலமுறை தான் தொடர்பு கொண்டு பேசியதாகவும்,  அவர் எங்கள் அணிக்கு வந்தால் சந்தோசம் எனவும் இபிஎஸ் அணியின் ஒ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.