அண்ணா பல்கலைக்கழக  துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாடுக்குள் கொண்டு செல்வதை கண்டித்தும், நிதி தேவையில்லை என்று கடிதம் எழுதிய சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திமுக இளைஞர் அணி மற்றும் அணியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு, உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


 
அப்போது, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அப்பல்கலைக்கழகம் மாநில கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும், வலியுறுத்தி கோஷமிட்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயநிதி;- இந்த ஆட்சியின் அவலம் இது. அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற போட்டியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவும் இருப்பார் என நினைக்கின்றேன். அவர் நிழல் முதல்வர் போன்று செயல்படுகிறார். தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார். இதுகுறித்து அமைச்சர் தெரியாது என்கிறார். இது அதிமுக ஆட்சி போடும் இரட்டை வேடம். அண்ணா பெயரிலான கட்சியைத்தான் பாஜகவிடம் அடகு வைத்தார்கள் என்றால், இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தையும் அடகு வைக்கின்றனர் என உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.