எங்களிடம் போதிய பலம் இருப்பதால் நான் ராஜினாமா செய்யப்போவதில்லை என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்தால், முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியானது. இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆட்சி அமைக்க போதிய பலம் இருக்கிறதா என்றும், அடுத்தக்கட்ட நகர்வு குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

 

அதன்பிறகு தனது ராஜினாமா முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் குமாரசாமி, எங்களிடம் போதிய பலம் இருக்கிறது. அதனால், ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் தேவை என்ன? நான் ராஜினாமா செய்யப் போவதில்லை.

கடந்த 2009-10ஆம் ஆண்டு, கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தார். அப்போது 8 அமைச்சர்கள் உட்பட 18 எம்.எல்.ஏக்கள், எடியூரப்பாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதற்காக அவர் ராஜினாமா செய்தாரா? என்று கேள்வி எழுப்பினார். நேற்று இரவு வரை வெளியான தகவலின் படி, இன்று காலை அமைச்சரவை கூடுவதே முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்வதற்கு தயாராகத் தான் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் ஆளும் தரப்பு எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் நடத்தி, ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாக எடியூரப்பா மீது காங்கிரஸ், மஜத கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றியும், பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் முதலமைச்சராக பதவியேற்ற 48 மணி நேரத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.