தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன் நிலைமை தலைகீழாகி விட்டதால் வெற்றிபெற வேண்டிய 7 தொகுதிகள் கூட கிடைக்காது என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ’’மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் அவர்கள் முறைகேடு ஏதும் செய்யாவிட்டால் மோடி நிச்சயமாக மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார். ஆனால், அவர்கள் முறைகேடு செய்தார்களா? இல்லையா என எனக்கு தெரியாது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம். மத்திய அரசில் மோடி, அமித்ஷாவை நீக்கி விட்டு பார்த்தால், ஆம்ஆத்மிக்கு போதிய இடங்கள் கிடைத்தால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வரப்போகும் அரசுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்.டெல்லியில் தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை, 7 இடங்களும் ஆம்ஆத்மிக்கு தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில், தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு ஒட்டுமொத்த முஸ்லிம்கள் ஓட்டும் காங்கிரஸ் கட்சிக்கு சென்று விட்டது. சுமார் 12 முதல் 13 சதவீதம் ஓட்டுக்கள் சென்றிருக்கிறது. என்ன நடந்தது, சரியாக எத்தனை சதவீதம் ஓட்டுக்கள் சென்றது? என்பதை அறிய முயற்சித்து வருகிறோம். அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் நான் மேற்கொண்டுள்ள பணிகளின் அடிப்படையில் மக்கள் எங்களுக்கு ஓட்டளிப்பார்கள்.

ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளோம். கடந்த 10 நாட்களாக எதிர்க்கட்சிகள் அதிக அளவில் பணம் கொடுத்துள்ளன. எங்களிடம் பணம் இல்லை. அதனால் தான் மக்களிடம் எதிர்க்கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு, ஆம்ஆத்மிக்கு ஓட்டுப் போடும்படி கேட்டுக் கொண்டேன். இந்த முறை தேர்தல் கமிஷன் தவறாக நடந்து கொண்டதுடன் எனக்கு நோட்டீசும் அனுப்பியது. நான் அதற்கு பதில் அளித்திருந்தால் அவர்கள் எனது கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பார்கள். அதற்கு பிறகு நான் பேசுவதை நிறுத்தி விட்டேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.