சசிகலாவின் ஒப்புதலுடன் தான் அனைத்து முடிவுகளும் நடந்து வருகிறது. அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்ததன் மூலம் சசிகலா ஓரங்கட்டப்படவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.  

அமமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்து வந்த டி.டி.வி.தினகரன் கட்சியை பதிவு செய்யும் பொருட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவுக்கு எந்தப்பத்வியும் கொடுக்கப்படவில்லை. இதனால், அமமுகவில் இருந்து சசிகலா ஓரம்கட்டப்பட்டுவிட்டார் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், இன்று டி.டி.வி.தினகரன் உட்பட அமமுகவின் முக்கிய உறுப்பினர்கள் பெங்களூரூவில் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்தனர். சசிகலாவை சந்தித்தது பின் அவர், ’’நான் அனைத்து முடிவுகளையும் சசிகலாவை அணுகித் தான் எடுத்து வருகிறேன். சசிகலாவிற்கு தெரியாமல் கட்சியில் எதுவும் நடக்கவில்லை. இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் சசிகலாவின் ஒப்புதலுடன்தான் எடுக்கப்பட்டு வருகிறது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சசிகலா ஓரம்கட்டப்படவில்லை. அமமுகவை பதிவு செய்ய அனைவரும் விரும்பினோம். இந்த விருப்பம் சசிகலாவிற்கும் இருந்தது. இதனால், சசிகலா ஓரம் கட்டப்பட்டுவிட்டதாக கருத கூடாது. தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக வரும். இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும். இடைத்தேர்தல் தோல்வியால், தமிழகத்தில் ஆட்சி மாற்ற ஏற்பட போகிறது’’ என அவர் தெரிவித்தார்.