Happy birthday DMDK Party
ஆயிரம் விமர்சனங்களுக்கு ஆளானாலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழக அரசியலில் ஆலமரங்கள்தான். அதன் ஆணி வேர்கள் டெல்லி வரை பரவியிருப்பதும், அதிலிருந்து பிரிந்த விழுதுகள் தனி மரமாகவே ஆகியிருப்பதும் அக்கழகங்களின் வீச்சை உறுதி செய்யும் ஆதாரங்கள்.
எழுச்சியோ, வீழ்ச்சியோ இரண்டையும் இணையாக பாவித்து சமன் செய்து ஓடிக் கொண்டேயிருக்கின்றன இந்த இரு வண்டிகளும். ஆனால் சமகாலத்தில் ஒரு கட்சி வீறு கொண்டு முளைத்து, ஆர்ப்பரித்து ஆடி, அதே வேகத்தில் வீழ்ந்ததென்றால் அது தே.மு.தி.க.தான்.
.jpeg)
2005_செப்டம்பர் 14_ம் தேதி இதே நாளில்தான் மதுரையில் தே.மு.தி.க.வை துவக்கினார் விஜயகாந்த். ‘நடிகர் கட்சி’ என்று விமர்சித்தவர்களே வீல்! என்று அலறும் வண்ணம் அரசியல் தளத்தில் தனி முத்திரை பதித்தது தே.மு.தி.க. உதயமான மறுவருடமே பொதுத்தேர்தலை தனியே சந்தித்தது.
தனியொருவனாக சபைக்கு சென்றாலும் ஆண்ட தி.மு.க.வின் கண்ணுக்குள் விரல்விட்டு ஆட்டினார் கேப்டன். அந்த தேர்தலில் 8% வாக்கு வங்கியை பெற்று தலை நிமிர்ந்து நின்றது அக்கட்சி.
.jpg)
பொதுவாக ஒரு திருமணம் மண்டபம் இடிபட்டால் சிமெண்டும் செங்கலும் உதிரும். ஆனால் கோயம்பேடில் உள்ள விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடித்ததன் மூலம் தி.மு.க.வின் செல்வாக்கே உதிர்ந்ததுதான் அரசியல் ஆச்சரியம். அதன் பின் முழுக்க முழுக்க தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் செய்ய துவங்கிய விஜயகாந்த் 2011 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 29 எம்.எல்.ஏ.க்களுடன் சபைக்குள் நுழைந்தார். ஆனால் வெறும் 3 மாதங்களில் கூட்டணி உறவு முறிந்தது.
.jpg)
அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையில் ஈகோ யுத்தம் உச்சம் தொட்டது. சட்டமன்றத்தில் ஒரு ரசாபாசமான சூழலில் கேப்டன் நாக்கை துருத்தி, பல்லை கடித்து, விரலை நீட்டி பேசியபோது சட்டசபை மாண்பு தலையிலடித்துக் கொண்டு திகைத்தது.
வெகுண்ட ஜெயலலிதா ‘எங்கள் கழகத்தோடு கூட்டணி வைத்ததால்தான் தே.மு.தி.க.வுக்கு அரசியல் வாழ்க்கை கிடைத்தது. இந்த நன்றியை மறந்து அவமதித்த அந்த அக்ட்சிக்கு வளர்ச்சியே கிடையாது, வீழ்ச்சிதான்.’ என்று ஜெ., விட்ட சாபம் அட்சரசுத்தமாக அப்படியே பலித்தது. இதன் பிறகு மளமளவென அரசியலில் இறங்குமுகத்தை சந்தித்தார் விஜயகாந்த் மாஃபா. பாண்டியராஜன் உள்ளிட்ட அவரது எம்.எல்.ஏ.க்கள் சிலர் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர்.
.jpg)
கட்சி கடும் சரிவை சந்தித்தாலும் விஜயகாந்துக்கு இருந்த தொண்டர் பலமும், மக்கள் செல்வாக்கும் அவரிடம் 10% வாக்கு வங்கி இருப்பதாக ஒரு பிம்பத்தை காட்டின. இதை நம்பிய பா.ஜ.க. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரோடு கூட்டணி வைத்தது. ஆனால் விஜயகாந்துக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிட்டவில்லை.
ஜெ.,வை முறைத்துக் கொண்டு நின்ற விஜயகாந்தை 2016 தேர்தலில் எப்படியாவது தங்களுக்குள் இழுத்துவிட வேண்டுமென்று தனது சீனியாரிட்டி, வயது, அரசியல் அனுபவம் என எதையும் பொருட்படுத்தாது அழைப்பு விடுத்தார் கருணாநிதி. ஆனால் இடையில் புகுந்த வைகோ விஜயகாந்தை கொத்திக் கொண்டு போய் மக்கள் நல கூட்டணியின் தலைமை கட்சியாகவும், முதல்வர் வேட்பாளராகவும் உட்கார வைத்தார். தி.மு.க. கூட்டணியை விஜயகாந்த் மறுத்தபடியால் அவரது கட்சிக்குள் பிளவு உருவாகியது. கொ.ப.செ. சந்திரக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் வெளியேறினர்.
.jpg)
ஆனாலும் அசரவில்லை கேப்டன். அந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது தே.மு.தி.க. விஜயகாந்தே தோற்றதன் மூலம் அக்கட்சிக்கான வாக்குவங்கி 3%க்கும் கீழே சென்றுவிட்டது என்றது ஒரு கணக்கு.
ஆனால் ‘இல்லையில்லை அது கூட்டணிக்கு விழுந்த ஓட்டுக்களையும் சேர்த்துத்தான். தே.மு.தி.க.வுக்கு இப்போது இருப்பது 1% வாக்கு வங்கியே’ என்றது மற்றொரு புள்ளிவிபரம்.
எது எப்படியோ இந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு அவரது கட்சியிலிருந்து கணக்குவழக்கில்லாத நபர்கள் கழன்று கொண்டனர். தொண்டர்களும்தான்!...என்பதுதான் இதில் அதிர்ச்சியே.
இதற்கிடையில் கடந்த சில வருடங்களாக விஜயகாந்தின் உடல் நிலை வேறு வருத்தப்படுவதாகவே அமைந்திருக்கிறது. சிங்கப்பூர் வரை சென்று சிறப்பு சிகிச்சை பெறுவதும், சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் திடீர் திடீரென அவர் அட்மிட் ஆவதுமாக இருந்தது அவரது தரப்பினரை திகைக்க வைத்தது.
விஜயகாந்தின் ஆகப்பெரிய தனித்துவமே அவரது அசால்ட் பேச்சுதான். யாருக்கும் அஞ்சாமல் எவருக்கும் சவால் விட்டு பேசுவார். ஆனால் உடல்நிலை பிரச்னைக்கு பிறகு தெளிவற்ற பேச்சு, மேடையில் விநோதமாக நடந்து கொள்வது, அர்த்தமில்லாமல் அழுவது சிரிப்பது என்று அவரது செய்கைகள் மாறியிருப்பது அக்கட்சிக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச கம்பீரத்தையும் வெகுவாய் கரைத்திருக்கிறது. பத்திரிக்கையாளர்களை நோக்கி ‘தூ’ என அவர் உமிழ்ந்தது, ‘தூக்கி அடிச்சுடுவேன்’ என்று மிரட்டியதெல்லாம் தமிழக அரசியலுக்கு ரொம்பவே புதுசு.

அவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் சமூக வலைதளங்களில் ஹாஸ்ய பொருளாக்கப்பட்டதோடு விஜயகாந்த் ஒரு காமெடி அரசியல்வாதியாக விமர்சிக்கப்பட்டபோது அக்கட்சியின் முக்கிய தூணாக விளங்கும் பிரேமலதாவே தளர்ந்து போனார். ஆனாலும் சமீப காலமாய் கேப்டனின் உடல்நிலை வெகுவாக சீராகிவிட்டது என்கிறார்கள்.
இன்று கலர் சட்டை டாலடிக்க, கறுப்பு கண்ணாடி மினிமினுக்க கோயம்பேடு அலுவலகத்தில் சொற்ப நிர்வாகிகள் மத்தியில் கட்சி கொடியேற்றி, தன் கழகம் 13_வது ஆண்டில் நுழைந்துள்ளதை கொண்டாடியிருக்கிறார் கேப்டன்.
இனி தேர்தலை அக்கட்சி சந்திப்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், அத்தனை மாவட்டங்களுக்கும் எடுப்பான நிர்வாகிகளை நியமிப்பதே விஜயகாந்துக்கு மிகப்பெரிய சவால்தான்.
எந்த வாக்கு வங்கியை வைத்து தமிழகத்தின் அத்தனை பெரிய அரசியல் கட்சிகளையும் தன் பின்னால் அலையவிட்டாரோ அதே வாக்கு வங்கியின் வாசலில் காலாவதியான செக்புக்கை ஏந்தி உட்கார்ந்திருக்கிறார் விஜயகாந்த்
