திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது இளைய மகள் இல்லத் திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா சந்தித்துப் பேசி தனது மகள் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தது பரபரப்பாக பேசப்படுகிறது. 

நேற்று மு.க.ஸ்டாலினை பற்றி கடுமையாக விமர்சித்த எச்.ராஜா இன்று அவரை நேரில் சந்தித்தது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. நேற்று  ’சிறுவன் சுஜித் மரணத்தை ஸ்டாலின் அரசியலாக்குகிறார்.  அறிவாலயம் மற்றும் முரசொலி அலுவலகங்கள் பஞ்சமி இடங்களில் அமைந்துள்ளன என்று வந்த தகவலையடுத்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித் மரணத்தை, ஸ்டாலின் அரசியல் ஆக்குகிறார் எனக் குற்றம் சாட்டிவிட்டு மறுநாள் அதே அறிவிவாலயத்தில் ஹெச் ராஜா ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.

 

தனது ட்விட்டர் பக்கத்தில், எச்.ராஜா தொட்டதெல்லாம் துலங்குகிறது என சுப.வீரபாண்டியன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த ஹெச்.ராஜா,’’ஆனால் ஸ்டாலின் தொட்டது துலங்க மாட்டேங்குதே. இன்று திமுக நிலைமை மல்லாக்க படுத்த கரப்பான் மாதிரி ஆயிடுச்சே’’என எச்.ராஜா ட்விட் போட்டிருந்தார்.

 

அதை இப்போது நினைவூட்டும் திமுக உடன்பிறப்புகள், எங்கள் தலைவர் தொட்டதெல்லாம் துலங்க மாட்டேங்குதே என கருத்துக் கூறிய எச்.ராஜா மகள் திருமணப் பத்திரிக்கையை கொண்டு வந்து தலைவரிடம் ஏன் கொடுக்க வேண்டும் என அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.