பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். “நீதிபதி சந்துரு ஃபேஸ்புக் பக்கத்தில் மத்திய நிதி அமைச்சரை ஊறுகாய் மாமி என விமர்சனம் செய்திருக்கிறார். அநாகரீகமான வார்த்தையைப் பதிவிட்ட சந்துரு,  எப்படி நீதிபதியாக இருக்க முடியும்? இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அண்ணாமலை பா.ஜ.கவில் சேர்ந்தால் உங்களுக்கு ஏன் எரிச்சல் வருகிறது? நீதிபதி சந்துரு சாதிய வெறுப்புணர்வோடு நடந்துள்ளார். அவர் அளித்த தீர்ப்புகள் சந்தேகத்திற்குரியன. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துகொண்டு இந்து விரோத, தேச விரோதக் கண்காட்சியை லயோலா கல்லூரியில் சகாயம்  திறந்து வைத்தார். அதைப் பற்றி இங்கு யாரும் பேசவில்லை.” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.


டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது குறித்து ஹெச். ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “ஆன்மீகத்துக்கும் கல்விக்கும் சேவை ஆற்றிய நகரத்தார் சமுதாயப் பெண்களைப் பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ இழிவாகப் பேசி சிக்கலில் மாட்டினார். அப்போது நான்தான் அவரைக் காப்பாற்றினேன். இதைப் பற்றி துணை முதல்வரிடம் கேட்டால் தெரியும். 
செல்லூர் ராஜூவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல. தமிழக அரசு அதிகாரிகள் தவறு செய்தால் சுட்டிக்காட்டுவது என்னுடைய பொறுப்பு. நான் தமிழக அரசை விமர்சிப்பது கிடையாது. கூட்டணி தர்மத்தை மதிக்கிறேன். அதே வேளையில் தோழமையோடு குறைகளைச் சொல்லும்போது பரிகாரம் செய்ய வேண்டும். அதை விடுத்து எல்லை மீறிப் பேசுவது கூட்டணிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும். கூட்டணியைக் கெடுக்க வேண்டும், பிரச்சினை கொடுக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை” என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.