டெல்டா மாவட்டங்களில் நீண்ட நாட்களாக ஓ.என்.ஜி.சி. உள்ளது என்றும் இத்தனை நாட்களாக மதிமுக பொது செயலாளர் வைகோ தூங்கிக் கொண்டிருந்தாரா? என்றும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கேள்வியெழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கச்சாண் எண்ணெய் குழாயில் கசிவு காரணாக விளைநிலங்கள் பாழாவதாக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

தஞ்சை, கும்பகோணம் அருகே தாராசுரத்தில், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வாகனங்கள் வெளியேற வேண்டும் என்று கூறினார்.

அப்படி வெளியாறாத வாகனங்களை அடித்து நொறுக்குவேன் என்றும் தமிழகத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற பாடுபடுவேன் என்றும் வைகோ கூறியுள்ளார்.

ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறுவதுபோல், கதிராமங்கலத்தில் போராட்டத்தை நான்தான் தூண்டிவிடுகிறேன். என் மீது வழக்குபோட்டால் அதை எதிர்கொள்வேன் என்றும் கூறினார். 

இது தொடர்பாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்டா மாவட்டங்களில் நீண்ட நாட்களாக ஓ.என்.ஜி.சி. உள்ளது. இத்தனை நாட்களாக வைகோ தூங்கிக் கொண்டிருந்தாரா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், வைகோவுக்கு மக்கள் ஆதரவு இல்லை, அவரது மனநிலை சமநிலையில் இல்லை, அவர் வீட்டில் இருப்பது நல்லது என்றும் ஹெச் ராஜா கூறினார்.