கொலைக் குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் கருத வேண்டுமே தவிர தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்த கருத்துக்கு எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கே.எஸ் அழகிரியின் கருத்தை மேற்கோள்காட்டி சரியான கருத்து என வரவேற்றுள்ளார். இது பாஜகவும் காங்கிரசும் நேரெதிர் அரசியலில் இருந்தாலும் இருவருக்கும் ஒரே கொள்கை தான் என்ற விமர்சனத்தை தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இதுவரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு நிறைவேற்றி தந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டுமென தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச்சாலைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். 

7 பேர் விடுதலை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம், ஆனால் அவர்களுக்கு அரசியல் கட்சியினர் விடுதலை கோருவது ஏற்புடையதல்ல. கொலைக் குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் கருத வேண்டுமே தவிர அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல. அப்துல்கலாம், காமராஜர், அண்ணா, கலைஞர், ஜீவானந்தம், ராமானுஜன் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது. கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டுமென்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம்-ஒழுங்கு பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும். எனவே முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது என தெரிவித்துள்ளார். 

அவரின் இந்த கருத்து கூட்டணிக் கட்சிகளான திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இதுகுறித்து திமுகவும் காட்டமாக விளக்கமளித்துள்ளது, அதாவது, கட்சியின் கொள்கை என்பது வேறு, தேர்தல் கூட்டணி என்பது வேறு எனவும் காங்கிரஸ் எங்கள் கூட்டணியில் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் கொள்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி காட்டமாக பதில் அளித்துள்ளார். அதே நேரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக இருந்துவரும் பாஜக தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுகவை விமர்சித்து வரும் பாஜக, தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

இது குறித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள எச்.ராஜா கே.எஸ் அழகிரியின் கருத்தை மேற்கோள்காட்டி, " சரியான கருத்து"  " பாரதியார் கூட வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் என்றுதான் பாடினார்.  வாழ்க தமிழர் என்று பாடவில்லை.  ஏனெனில் தீய தமிழர்கள் வாழ்க என்று சொல்வது சரியல்ல... என கூறியுள்ளார்.  எச்.ராஜா கே.எஸ் அழகிரி  கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவும் காங்கிரசும் எதிரெதிர் திசையில் இருந்தாலும் இருவரின் கொள்கையும் ஒன்றுதான் என்ற விமர்சனமும் ஈழ மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.