மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு பதிவின்போது ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தலைமையில் கூடிய 22 எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு செய்து பாஜக சூழ்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளதாக எதிர்கட்சிகள் பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், மக்களிடம் பாஜகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளருமான ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,’’2014 தேர்தல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடைபெற்றது. ஆனால், அப்போது பாஜகவோ அதன் கூட்டணிக் கட்சிகளோ உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையரிடம் சென்று கூச்சல் எழுப்பவில்லை. மக்களிடம் கலவரத்தை தூண்டும் விதமாக பேசவில்லை. கேம்பிரிட்ஜ் அனலிடிகா வழிகாட்டுதல் படியே இவர்கள் நடந்து வருகின்றனர்’’ என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இந்தப் பதிவிற்கு கருத்துத் தெரிவித்துள்ள நெட்டிசன்கள் ’’இன்னும் தேர்தல் முடிவே வரல. அதற்கு முன்னே நீங்க ஜெயிச்ச மாதிரி கொடுக்குற பில்ட் அப் தங்க முடியலடா சாமி’’என எதிராகவும், ’சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அங்கு சென்று ஏன் கூச்சலிடுகின்றனர்’என ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.