பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயளாளர்களுள் ஒருவராக இருப்பவர் ஹச்.ராஜா. சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி உயர்நீதிமன்றத்தையும் விமர்சித்து பின் மன்னிப்பு கேட்டவர். அவ்வப்போது இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சலசலப்பை உண்டாக்கும்.

இந்த நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை வந்திருந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பாஜக தலைவரை நியமிப்பதில் எந்த இழுபறியும் ஏற்படவில்லை என்றார். பாஜக தலைமை யாரை மாநில தலைவராக நியமித்தாலும் அவரை தொண்டர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த காலத்தில் நாட்டின் ஜிடிபி 5 சதவீதமாக இருந்ததாகவும் அதை நல்ல பொருளாதார வளர்ச்சி என்று அவர் கூறியதாக குறிப்பிட்ட ராஜா, அப்போது பேசியது நல்ல வாய்.. இப்போது பேசுவது வேற வாயா..? என்று விமர்சித்தார்.

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி சாதாரமானது தான் என்று அந்த துறை சார்ந்த வல்லுநர்களே தெரிவிப்பதாக கூறினார். மேலும் கனிமொழி வெற்றி பெற்ற தூத்துக்குடி தொகுதி மற்றும் சிவகங்கை, நீலகிரி, மத்திய சென்னை ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு நிச்சயம் இடைத்தேர்தல் வரும் என்று குறிப்பிட்டார்.