பாஜக தேசிய முன்னாள் செயலாளர் ஹெச். ராஜா மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சுமுகமாக முடிவு செய்திருக்கிறார்கள். அதிமுகவில் குள்ளநரி எண்ணங்களை செயல்படுத்த திமுகவும் காங்கிரஸும் முயன்றன. ஆனால், அது நடக்கவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காளையார்கோவிலில் திமுகவினர் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். கருணாநிதி, அடுத்து ஸ்டாலின், அவரையடுத்து உதயநிதி என திமுகவில் ஒரு குடும்பத்தின் அடிமையாக இருக்க நாங்க விரும்பவில்லை என அக்கட்சியிலிருந்து விலகியவர்கள் தெரிவித்தார்கள். முன்பு ஒரு முறை திமுக என்ன சங்கரமடமா என திமுக தலைவராக இருந்த கருணாநிதி கேள்வி எழுப்பினார். தற்போது திமுக கருணாநிதி மடமாக மாறிவிட்டது. எனவேதன் அக்கட்சியினர் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். பிரதமர் மோடி தலைமையின் ஈர்ப்பால் பாஜகவில் இணைகிறார்கள்.
திமுகவில் பலரும் அதிருப்தியில் உள்ளனர். திமுக மூழ்கும் கப்பலாக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற வாய்ப்பே இல்லை.” என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.