திஹார் சிறையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் கைது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சூசகமாகத் தெரிவித்துள்ளார். 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு 3 மாதங்களாக சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனாலும் ப.சிதம்பரத்தால் வெளியே வர முடியவில்லை. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதும் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதால், சிதம்பரத்தால் சிறையிலிருந்து வெளியே வர முடியவில்லை. தற்போது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு மெலித்துவிட்டார் ப.சிதம்பரம். குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஜாமீன் கோரியுள்ளார்.
இந்நிலையில் ப. சிதம்பரத்துக்கு அடுத்து அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் கைது என்று மறைமுகமாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ““ஐ(ப்)‘பசி’க்கு அடுத்தது  ‘கார்த்தி’(க்)கை (து) தானே!.. #யாரோ #என்னமோ” எனத் தெரிவித்துள்ளார்.