கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால்தான் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியிருப்பது தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு நேற்றுடன் முடிந்தது. ஆனால் வாரியம் அமைக்கப்படவில்லை. மத்திய அரசின் இந்த அலட்சியத்தால், விவசாயிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் கடும் அதிருப்தியிலும் ஆதங்கத்திலும் உள்ளனர்.

ஏற்கனவே தமிழக மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சு, தமிழக மக்களிடையே மேலும் ஆதங்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. 

இந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில், கடந்த 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட  வேல்ரத யாத்திரை நேற்று மதுரையை அடைந்தது. அதையொட்டி வேல் சங்கமப் பொதுக்கூட்டம் பழங்காநத்தத்தில் நடந்தது.

அதில் பேசிய எச்.ராஜா, கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால்தான் தமிழகத்துக்கு காவிரி நீர் வரும். எனவே பாஜக வெற்றி பெற தமிழக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என பேசியுள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் ஏற்கனவே வேதனையில் இருக்கும் தமிழக மக்களுக்கு எச்.ராஜாவின் பேச்சு, கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.