சசிகலாவை நேரில் சந்தித்தார் எச்.ராஜா !! மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 11, Feb 2019, 9:48 AM IST
h.raja meets sasikala in hospital
Highlights

மதிமுக தொண்டர்களால் தாக்கப்பட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பாஜக நிர்வாகி சசிகலாவை  அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேரில் சந்தித்து  நலம் விசாரித்தார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே பெரியார் சிலை, அண்ணா சிலை, குமரன் சிலைக்கு மாலை அணிவித்த  மதிமுக பொதுச் செலாளர் வைகோ கருப்புக் கொடி போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். 

காவிரி பிரச்சினை, கஜா புயல் பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்துக்கான தேவைகளை மோடி நிறைவேற்றவில்லை என்று வைகோ குற்றம் சாட்டினார். இப்போராட்டத்தில் ஏராளமான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.


அப்போது திடீரென பாஜக பெண் தொண்டர் சசிகலா என்பவர் கூட்டத்துக்குள் காலணி வீசியதோடு, பாஜகவுக்கு ஆதரவாகவும் மோடியைப் புகழ்ந்தும் ஆவேசமாகக் கோஷங்கள் எழுப்பினார். 

இதனால் ஆத்திரமடைந்த மதிமுக தொண்டர்கள் அவரைத் தாக்கினர். போலீஸார் இதைத் தடுத்து நிறுத்தும் போது போலீஸாருக்கும் மதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காயப்பட்ட பாஜக பெண் தொண்டரை போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.  இதைத் தொடர்ந்து மதிமுக தொண்டர்களை வைகோ சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.மதிமுக தொண்டர்கள் பாஜக பெண் தொண்டரைத் தாக்கிய சம்பவத்தால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் மதிமுக தொண்டர்களால் தாக்கப்பட்ட சசிகலா திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . அவரை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் சசிகலாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

loader