வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வந்தால் தாஜ்மகால் போன்ற இடங்களைத்தான் சுற்றிக்காட்டுவார்கள். அந்த நிலை தற்போது மாறியுள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். மோடி - ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது குறித்து பல தகவல்களை ஹெச். ராஜா பகிர்ந்துகொண்டார். “வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வந்தால் தாஜ்மகால் போன்ற இடங்களைத்தான் சுற்றிக்காட்டுவார்கள். அந்த நிலை தற்போது மாறியுள்ளது. மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் பிரதமர் மோடியின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. மிகவும் தொன்மை வாய்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு தலைவர்களின் சந்திப்பு நடத்துள்ளது. இந்தச் சந்திப்புக்கு முழு முயற்சிகளை மேற்கொண்ட மோடியை உலகமே பாராட்டிக்கொண்டிருக்கிறது.


இப்போது மட்டுமல்ல, புராண, வேத காலத்தில் இருந்தே காஞ்சிபுரம் நகரங்களில் சிறந்தது விளங்கிவருகிறது. அந்த நகரின் பெருமையை இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்து சதி செய்துவிட்டார்கள். சிற்பக்கலையிலும் பொறியியல் துறையிலும் இந்தியா சிறந்து விளங்கியதற்கு மாமல்லபுரமும் தஞ்சை பெரிய கோயிலுமே உதாரணம். ஆனால், வெள்ளையர்கள் ஆட்சியில்தான்தான் இந்தியா வளர்ச்சிபெற்றது என்ற மாயை இங்கே உருவாக்கப்பட்டது. சுமார் 1, 300 ஆண்டுகளுக்கு முன்பே சீன யாத்ரிகரான யுவான் சுவாங் போன்றவர்கள் சீனாவிலிருந்து இங்கே வந்துள்ளனர். இந்தியா - சீனா இடையே வரலாற்று ரீதியிலான உறவு உள்ளது.


பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கோ பேக் மோடி டிரெண்ட் செய்யப்படுகிறது. பாகிஸ்தானை மையமாக வைத்து மோடி வருகைக்கு எதிராக பிரிவினைவாதிகள் டிரெண்டிங் செய்கிறார்கள் என்பது ஏற்கெனவே நிரூபணம் ஆகி உள்ளது. தற்போது உளவுத்துறை விசாரணையிலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளைக்காரர்கள்தான் இந்தியாவை ஆள வேண்டும் எனப் பேசிய கூட்டம்தான் இந்தச் செயலில் ஈடுபட்டுவருகிறது” என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.