கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்திய, எதிர்க்கட்சிகள் பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மோடியை கடுமையாக விமர்சித்ததற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளார். 

 

கொல்கத்தா மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின் ‘’மோடியின் இந்த ஆட்சி காப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான ஆட்சி. இந்த அரசாங்கத்தை பிரைவேட் கம்பெனியாக மாற்றிவிட்டார். நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோரை தப்ப வைத்ததில் ஊழல் இல்லையா? 500, 1000 ரூபாய் புதிய நோட்டுகளை வெளியிட்டு மக்களை வஞ்சித்ததில் ஊழல் இல்லையா? அதை யாருடைய நலனுக்காக செய்தார்?

அப்படிப்பட்ட மோடி ஊழலை பற்றி பேசலாமா? அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதை போல மோடி ஆட்சியில் ஊழலும் ஒரே இதில் குவிந்து கிடக்கிறது. மோடி ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் எனக்கூறினார். ஆனால், மக்களின் தலையில் கல்லை போட்டார். வாயில் மண்ணைப்போட்டார். மொத்தத்தில் குழியில் தள்ளி விட்டுவிட்டார்’’ எனப் பேசியிருந்தார்.

 

இந்த பேச்சை தொலைக்காட்சி நேரலையில் பார்த்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில், "1967ல் ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்... ஒரு படி நிச்சயம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து தமிழர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஊழல் திமுக பாஜக வை விமர்சிப்பது யாரை ஏமாற்ற. சாமானியர் வேஷம் போட்டு இன்று தமிழகத்திலேயே மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளி மு.க.ஸ்டாலினை வீழ்த்துவோம்" என பதிவிட்டுள்ளார்.