கார்ட்டூனிஸ்ட் வர்மா கைதுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.


சமூக ஊடங்களில் கறுப்பர் கூட்டம் சேனல் சார்பாக வெளியிடப்பட்ட கந்த சஷ்டி வீடியோ இந்து அமைப்புகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குப் பதிலடி தரும் வகையில் கார்ட்டூனிஸ்ட் வர்மா ஃபேஸ்புக்கில் தகவல் ஒன்றை பதிவிட்டார். மேலும் நபிகள் நாயகம் பற்றி கார்ட்டூன் ஒன்றை வெளியிடப்போவதாகவும் அதில் கூறியிருந்தார். இந்நிலையில் விழுப்புரத்தில் வர்மாவை போலீஸார் கைது செய்தனர். இந்த கைதுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் அடுத்தடுத்து வெளியிட்ட பதிவில், “முருகப்பெருமானின் துதி கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசி விடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் ஹசிப் முகம்மது மீது நடவடிக்கை எடுக்காமல் அதை கண்டித்த கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்துள்ளது அப்பட்டமான இந்து விரோத நடவடிக்கை. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
Sec 41-A of Cr pc கிரிமினல் சட்டப்பிரிவு 41A ன் படி 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டணை பெறக்கூடிய குற்றமாக இருந்தால் மட்டுமே நோட்டீஸ் இல்லாமல் கைது செய்ய முடியும். இல்லை என்றால் முடியாது. இது Unknown Vs Nakkeeran Gopal தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது விழுப்புரம் காவல்துறைக்கு தெரியாதா?” என்றும் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.