h raja condemns vairamuththu on his speech over andal

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராஜபாளையத்தில் ஒரு நாளிதழ் சார்பில் தமிழ் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு, கவிஞர் வைரமுத்து சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அவர் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியுள்ளார் என்று தமிழகம் முழுதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வேறுபாடு குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் அந்த விழாவிற்கு வந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் மேடையில் பேசியபோதே அதிருப்தியுடன் சிலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதே பேச்சு, மறு நாள் அந்த நாளிதழில் முழுப் பக்க கட்டுரையாகவும் வந்தது. இதனால் அதைப் படித்த பலரும் கொந்தளித்துப் போயினர். 

இந்நிலையில் இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக வைரமுத்துவுக்கு பாஜக., செயலர் ஹெச்.ராஜா உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, இந்த நிகழ்வு தொடர்பாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, கவிஞர் வைரமுத்துவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அவரது பேச்சில், “ ஆண்டாள் குறித்து எந்த வார்த்தையைப் பேசினாரோ அப்படிப்பட்ட பின்னணியில் தான் பேசியவர் வந்திருக்கிறார். அவருக்கு இப்படிப் பேச எப்படி தைரியம் வந்தது? நாம் மானங்கெட்டுப் போயிருப்பதால், ஒரு வெட்டிப் பய வைரமுத்து இப்படி பேசியிருக்கிறார் என்கிறேன் நான்.... என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். 

மனைவியை விட்டு கவிதை எழுதச் சொல்லி, அதை புத்தகமாக்கி வியாபாரம் செய்யும் நீயெல்லாம் கவிப்பேரரசா? என்று ஒருமையில் திட்டித் தீர்த்த ஹெச். ராஜா, வைரமுத்து இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார். 

இத்தகைய அவமானங்களை மாற்ற வேண்டும் என்றால், இந்துக்கள் வீதிக்கு வர வேண்டும் என்று காட்டமாகப் பேசினார் எச்.ராஜா. 

இந்நிலையில் வைரமுத்து, அவரது பேச்சுக்கு இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.