தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தடையின்றி விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி வருமான வரித்துறையினர் சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள மாதவராவ் உள்ளிட்டோர் பங்கு தாரராக உள்ள குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தி, குடோனுக்கு சீல் வைத்தனர். இந்தச் சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் மற்றும் மாதவராவ் எழுதிய ரகசிய டைரி, சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கியது.

 

அதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட ஏராளமானோரின் பெயர்கள் பட்டியலாக இருந்தது தெரிந்தது. மேலும், காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள், கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

 

இந்நிலையில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சென்னை முகப்பேரில் உள்ள முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், தமிழக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 40 வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் புழல் உதவி கமிஷனராக இருந்தவர் மன்னர்மன்னன். தற்போது, அவர் மதுரையில் டிஎஸ்பியாக உள்ளார்.

 

இவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளை கேட்டபோது, மன்னர்மன்னன் புழல் காவல் எல்லை உதவி கமிஷனராக இருந்தபோது, மாதவராவின் குட்கா குடோன் பற்றி அறிந்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஒரு தொகையை பெற்று கொண்ட அவர், அமைச்சர் முதல் மேல்நிலை அதிகாரிகள் வரை பரிந்துரை செய்துள்ளார். இதன் மூலம் பலரும் பலகோடி சம்பாதித்துள்ளனர் என மாதவராவ் வாக்குமூலத்தில் தெரியவந்ததாக கூறினர்.