குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்பட பலரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், குட்கா ஊழல் குறித்த விசாரணையில் அமலாக்கத்துறையும் இணைந்துள்ளது. இதையொட்டி குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் பெயர் பட்டியலை அமலாக்கத்துறை, சிபிஐயிடம் கேட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர்கள், அதிகாரிகளின் சொத்துக்கள் குறத்து அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அதற்கான ஆவணங்களை, சிபிஐ அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளனர். அதே நேரத்தில், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கைது செய்வது சாதாரண விஷயம் அல்ல. இதனால், இந்த விவகாரத்தை கவனமாக சிபிஐ கையாண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போதிய ஆதாரங்களை திரட்டிய பின்னரே, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். 

இதையொட்டி வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அவை ஊழல் குறித்து உறுதி செய்யப்பட்ட பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.